Wednesday, January 26, 2011

மனைவி கொலை கணவர் கைது

கல்லல் :கல்லலில் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பொய்யலூரை சேர்ந்த ராஜூ மகள் உஷா(26). சின்னநாச்சியாபுரத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மருதுபாண்டி (31). இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். மலர்விழி (5), மகாலட்சுமி (3) மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு 2 தினங்களுக்கு முன், தனது தந்தை வீடு உள்ள பொய்யலூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம், அங்கு சென்ற மருதுபாண்டி, மனைவியை வீட்டிற்கு அழைத்தார். அவர் வர மறுத்துவிட்டார். இந்த கோபத்தில் திரும்பி சென்றவர் நேற்று அதிகாலை 5.50 மணிக்கு பொய்யலூரில் உள்ள மனைவி வீட்டிற்கு அரிவாளுடன் சென்றார். வீட்டில் இருந்த மனைவியின் கழுத்தில் வெட்டி கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் நேதாஜி, மனைவியை கொன்றவரை கைது செய்தார்.

அழகப்பா கல்லூரியில்பட்டயப் படிப்பு துவக்கம்

காரைக்குடி:""காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் விவசாயம் சார்ந்த பட்டய படிப்பு துவக்கப்பட்டுள்ளது,'' என தாவரவியல் துறை தலைவர் அருண்குமார் கூறினார்.அவர் கூறியது, ""இக்கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பு மட்டுமின்றி சுயவேலைவாய்ப்பு பெறும் படிப்புகள் இங்கு துவக்க முடிவு செய்யப்பட்டது. பி.எஸ்சி., மாணவர்கள் கூடுதலாக இயற்கை விவசாய நுட்பங்கள் குறித்த பட்டய வகுப்பில் சேரலாம். அறிவியல் துறை மட்டுமின்றி, பிற துறை மாணவர்களும் சேரலாம். 
மண்ணின் தன்மை மதிப்பிடுதல், தொழுஉரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், உயிர் பூச்சிக் கொல்லி (பயோ பெஸ்டிசைடு) தயாரித்தல், காளான் வளர்ப்பு குறித்து கற்றுத்தரப்படும். இதற்கான கல்வி கட்டணம் 123 ரூபாய் மட்டுமே,'' என்றார்.

கல்விக்கடனுக்காகஅலைக்கழிப்பு

மானாமதுரை:கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை, வங்கிகள் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகளவு கல்விக்கடன் வழங்கப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டால், புது காரணங்களை தேடிக்கண்டுபிடித்து அலைக்கழிக்கின்றனர். 
பல ஆவணங்களை கொடுக்குமாறு கூறுகின்றனர். மாணவர்கள் வங்கிக்கு நடையாய் நடப்பதால் கல்வி பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து மானாமதுரையை சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை குமார் கூறுகையில், ""விண்ணப்பம் வாங்கியதில் இருந்து, தினமும் ஒரு வங்கியில் கையெழுத்து வாங்கி வருமாறு கூறுகின்றனர். தற்போது, நோட்டரி பப்ளிக் சான்று வாங்கி வருமாறு, நிபந்தனை விதிக்கின்றனர். இதனால் கல்வி பாதிக்கிறது. அரசியல்வாதிகள், புரோக்கர்கள் பரிந்துரைத்தால் தாமதமின்றி கிடைக்கிறது,'' என்றார்.


விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை:சிவகங்கை வசந்தம் உண்டு உறைவிட பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நன்னடத்தை அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சரளா வரவேற்றார். தாளாளர் அருண் நன்றி கூறினார்.

தேவகோட்டை ஷீரடி சாய்பாபாகோயில் கும்பாபிஷேகம்


தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் குடும்பத்தாரால் இக்கோயில் கட்டப்பட்டது. வடஇந்தியாவை போன்று சாய்பாபா அமர்ந்த நிலையில் சிலை மற்றும் சுவர்ண விநாயகர் சன்னதியுடன் அமைந்துள்ளது.
கடந்த 24ம் தேதி அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. கோனேரி ராஜபுரம் சபேசன், கருப்பு குருக்கள் தலைமையில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
அபிஷேகம்:நேற்று காலை 6.30 மணிக்கு யாகசாலையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 10 மணிக்கு கோயில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம், பூஜைகள் நடந்தன. நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் - மீனாட்சி ஆச்சி குடும்பத்தினர் வரவேற்றனர்.

அமைச்சர் பெரியகருப்பன், ராமசாமி எம்.எல்.ஏ., கேரளா முத்தாளமடம் சுனில்தாஸ்சுவாமி, யோகிராமன், ஸ்பிக் நிர்வாக இயக்குனர் ஏ.சி.முத்தையா, தேவகி, குமாரராணிமீனா முத்தையா, ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் படிக்காசு, ஐகோர்ட் நீதிபதிகள் சொக்கலிங்கம், ஜெகதீசன், ஈஸ்வரபிரசாத், வெங்கட்நாராயணன், தேஸ்பாண்டே, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஸ்தபதி வடுகநாதன் பங்கேற்றனர்.

அரியக்குடியில் தரைப்பாலம் சேதம் போக்குவரத்து பாதிப்பு

காரைக்குடி :அரியக்குடியில் பாலம் உடைந்து பல மாதங்களாகியும், செப்பனிடாததால், அரியக்குடி - உஞ்சனை இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. உஞ்சனை ரோட்டில் கழிவு நீர் செல்வதற்காக, சன்னதி தெருவில் தரைப்பாலம் அமைத்தனர். தொடர்மழைக்கு இப்பாலம் சேதமடைந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அரியக்குடி ஊராட்சி தலைவர் சிறியமலர் கூறுகையில், ""இந்த ரோட்டின் இரு புறமும் கடை வைத்துள்ளனர். தரைப்பாலம் உடைபட்டுள்ளதால், பஸ் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என்றார்.

அரசு மருத்துவமனையில் சாப்பாடு வினியோகம் குறைவு

காரைக்குடி :காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஒதுக்கீடு படி உணவு வழங்காததால், நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு 80 உள்நோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தினமும் காலையில் இட்லி, பால், வாழைபழம், மதியம் சாப்பாடு, இரவு உப்புமா வழங்கப்படுகிறது. இங்கு, ஒரு நோயாளிக்கு வழங்கப்படும் அளவிற்கேற்ப உணவு வழங்குவதில்லை. குறைவாக வழங்குவதால், உணவு பற்றாக்குறையில் நோயாளிகள் தவிக்கின்றனர். நோயாளி ஒருவர் கூறுகையில், ""இரவு ஒரு கரண்டி உப்புமா தான் தருகின்றனர். இது பற்றாக்குறையாக உள்ளது. காலை முட்டை தரவேண்டும். ஆனால், வாழைபழம் தருகின்றனர். சுண்டல் உள்ளிட்ட உணவுகளை குறைவாக தருகின்றனர்,'' என்றார்.